டாட்டிலில் நாங்கள் ஆழமாக நம்பும் சில விழுமியங்கள் உண்டு

நாங்கள் டாட்டில் தொடங்கும்போது, எங்களுக்கு இருந்தது ஒரேயொரு எளிமையான குறிக்கோள்தான் : இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தகவல் தொடர்பிற்காகத் தொலைபேசியை மட்டும் சார்ந்திருப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் சரியான தகவல்கள் எளிமையாக, அணுகக்கூடிய வகையில் கிடைக்க வேண்டும் என்று எண்ணியபோது தோன்றியதுதான், டாட்டில். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இணையத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு ஆன்லைனின் அறிமுகம் என்பது, வாட்சப் போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகளின் வழியேதான் கிடைக்கிறது. டிஜிட்டல் ஊடகங்களில், செய்தி உள்ளடக்கத்தினை உருவாக்கும் வாய்ப்பு பரவலாக அனைவருக்கும் கிடைப்பதால், அதன் நம்பகத்தன்மையை நாம் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. டிஜிட்டல் மற்றும் ஊடகத்துறையில், செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்குத் தேவையான விதிகளும், வசதிகளும் இல்லாதபோது, தவறான செய்திகள் வாசகர்களைச் சென்றடைவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஆர்வம் ஒன்றினை அடிப்படையாகக்கொண்டுதான் டாட்டில் பிறந்தது. இந்தியாவின் வாட்சப் உரையாடல்கள் பலவற்றிலும், அதிக அளவில் தவறான செய்திகள் பரவியதுதான், எங்கள் தேடலின் முதல் புள்ளியாக இருந்தது. ஆரோக்கியமான ஆன்லைன் உரையாடல்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற எளிமையான கேள்விதான், எங்கள் பயணத்தைத் தொடங்கியது. ஒவ்வொரு அடியிலும், நாங்கள் நிறைய கற்றுகொண்டோம். இந்த ஓராண்டுப் பயணத்தில், இதே நோக்கத்திற்காக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படும் ஆராய்ச்சியாளர்கள், தகவல் சரிபார்ப்பவர்கள், இதழியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை இனம்கண்டுகொண்டோம். எங்கள்முன் நிற்கும் இந்தச் சவால், வெறும் ஒரு செயலியுடன் நின்றுவிடுவது அன்று. இந்தியர்கள் தகவல் தொடர்பிற்காகப் பல்வேறு தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, தவறான தகவல்களும், வதந்திகளும், எந்தவொரு ஆன்லைன் உரையாடலுக்குள்ளும் எளிமையாக நுழைக்கப்படலாம் என்ற வாய்ப்பு உள்ளது. இச்சூழ்நிலையில், அவர்களுடைய நேரம், பொருளாதார உதவி மற்றும் துறைசார் அறிவு ஆகியவற்றை அளித்த அனைவருக்காகவும், எங்களால் இயன்ற சிறந்த பணியை மேற்கொள்வதைக் கடமையாகவே நினைக்கிறோம். ஒவ்வொரு நாளும் இந்தக் களத்தில் வேகமான மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, எங்கள் பணியினை வெளிப்படையாக அணுகவேண்டும் என்று நினைக்கிறோம். எங்கள் பணியின் தொடக்கக் காலத்தில் எங்கள் பண்புகளை நாங்கள் தெளிவாக வரையறுப்பது, எதிர்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் செயல்திட்டங்களின் நெறிமுறைகளுக்கான அடித்தளம் என்றே கருதுகிறோம்.

வெளிப்படைத்தன்மை:

நாங்கள் வெகுகாலமாக, திறமூல (opensource) செயல்திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்கள் என்பதால், குழுவாக இணைந்து உருவாக்கப்படும் கருவிகளின் மதிப்பினை நாங்கள் நன்றாக அறிவோம். திறமூல செயல்திட்டங்களால் பல நன்மைகள் உண்டு என்று என்றாலும், டாட்டில் அடைய எண்ணும் குறிக்கோள்களுக்கு, இதுவே சரியான வழிமுறையாக இருக்கும் என்று எண்ணுகிறோம். தவறான தகவல்களின் பரிமாற்றம், உள்ளூர்முதல் உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒரு தனித்த தளமோ அல்லது குழுவோ மட்டும் எதிர்கொள்ளும் சவாலாக இல்லை என்பதால் இதற்கான தீர்வினை அனைவரும் இணைந்து, பல்வேறு துறைகளுக்கான உள்ளீடுகளுடன் மட்டுமே உருவாக்க முடியும். டாட்டிலில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால், நாங்கள் உருவாக்கும் கருவிகளை அவரவர் பயன்பாட்டிற்கேற்ப பயன்படுத்தவும், திருத்தவும், பகிர்வதற்கும் வசதியாக இருக்கும். டாட்டிலின் மென்பொருள்கள் யாவும் GPL உரிமம் பெற்றதாக இருக்கும். எனவே, அனைவரும் இணைந்து இந்த மென்பொருளுடன் இயங்குவதால், இதனைப் பொது உரிமமாக (Commons) எதிர்காலத்தில் உருவாக்க இயலும்.

அனைவருக்குமான அணுகுமுறை:

பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளைக் கொண்ட இந்தியாவில், ஒரேமாதிரியான அணுகுமுறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. வெவ்வேறு மொழிகள், அனுபவங்கள், கற்றல் மற்றும் தொடர்பு முறைகள் இங்கு இருப்பதால் அவை அனைத்தையும் தழுவிய ஓர் அணுகுமுறையைப் பின்பற்றுவதையே எங்கள் குறிக்கோளாகக் கருதுகிறோம். வெவ்வேறு பின்புலங்களிலிருந்து வரும் அனைவருக்கும் ஏற்றவாறு எங்கள் பணியினைச் செய்ய நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்

நிலையாக நீடித்தல்

இந்நிறுவனத்தின் ஒவ்வொரு நிலையிலும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளையும், அதே நேரம் எதிர்காலத்தில் எவ்வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் சேர்த்தே ஆராய்கிறோம். டாட்டிலில் எங்கள் குறிக்கோள்களுக்காக, சமூக-தொழில்நுட்ப அணுகுமுறைகளில் புதுமையைப் புகுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதே நேரத்தில், தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் செயல்திட்டங்கள் காலப்போக்கில் நீடித்து நிற்பது, ஒரு நிறுவனத்திற்கு இன்றியமையாத ஒன்றாகிறது. இதனை அளவுகோலாக வைத்துதான், இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படாத செயல்திட்டங்களையும் நாங்கள் அணுகுகிறோம். எனவே, எந்த ஒரு புதிய சிந்தனைகருவாக, திட்டமாக இருந்தாலும், அது அனைத்து அளவுகோல்களிலும் – தொழில்நுட்ப ரீதியாக, நிறுவனத்தின் மேலாண்மைக்காக நீடித்து நிற்குமா என்று ஆய்ந்து பார்க்கிறோம்.

பணிவு

இத்துறையில் அனுபவம் மிக்க வல்லுநர்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம் என்பதனை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. நன்றாகக் கவனிப்பதே நல்ல கருவிகளை உருவாக்க அடிப்படை என்று நாங்கள் அறிந்துள்ளோம். பணிவுடன் கவனிக்கவும், கற்கவும் எப்போதும் தயாராக இருக்கிறோம். எங்களின் புதிய யோசனைகளைவிட மக்களின் அனுபவங்களுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம்.

ஆர்வமுடைமை

நாங்கள் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல, டாட்டில் எங்கள் ஆர்வத்தினால் பிறந்தது. தவறான தகவல்களைப் பற்றியும், வதந்திகளைப் பற்றியும், மக்கள் ஏன் சிலவற்றை வேகமாக இணையத்தில் பரப்புகிறார்கள் போன்றவற்றை நாங்கள் மென்மேலும் கற்றுக்கொள்ள முயன்றதன் நீட்சிதான் டாட்டில். இந்த ஓராண்டில் நாங்கள் கற்றுக்கொண்டவை அனைத்தும், எங்களுக்கு மேலும் பல கேள்விகளையும், கருதுகோள்களையும் அளித்துள்ளது. பல்வேறுவிதமான மக்கள், அவர்கள் பயன்படுத்தும் பலதரப்பட்ட தொழில்நுட்பங்கள், புதிய சவால்கள் – இவை அனைத்தும் எங்கள் ஆர்வத்திற்குத் தீனி போட்டு, எங்கள் வேலைக்களத்தினை இன்னும் விரிவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்!

நாங்கள் மேலே குறிப்பிட்ட அனைத்துப் பண்புகளும், மிக அடர்த்தியானவை, மேன்மையானவையும்கூட. அவற்றிலிருந்து நாங்கள் வழுவி நடக்கும் நிலை எங்களுக்கு ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலாகவோ நிச்சயமாக நிகழலாம். ஆனால், எங்களுக்காகப் பண்புகளை இப்படி வரையறுத்துக்கொள்வதன்மூலமாக, அவை இப்போது எங்களிடத்தில் இல்லாத பட்சத்திலும்கூட அதைநோக்கி ஒவ்வொரு நாளும் நாங்கள் பயணப்படுவது சாத்தியமாகும். எங்கள் விழுமியங்களில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது, கடமைப்பொறுப்புடன் பணியாற்ற உதவும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் எங்கள் விழுமியங்களிலிருந்து விலக முற்படும்போதும், நாங்கள் எங்களை மீளாய்வு செய்துகொள்ளவும், இதுதொடர்பான அறிவுரைகளை ஒருசேரப் பெற்று எழவும் வாய்ப்பளிக்கும் என்றே எண்ணுகிறோம்.

Text and illustrations on the website is licensed under Creative Commons 4.0 License. The code is licensed under GPL. For data, please look at respective licenses.